லைஃப்ஸ்டைல்
கொரோனா முன் பலமானவர்கள் ஆண்களா, பெண்களா?

கொரோனா முன் பலமானவர்கள் ஆண்களா, பெண்களா?

Published On 2020-06-22 04:20 GMT   |   Update On 2020-06-22 04:20 GMT
கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமெங்கும் விஞ்ஞானிகள் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றின் பிற அம்சங்கள் பற்றியும், அது உலகை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

பெண்கள் குணம் அடைய அதிக வாய்ப்பு...

உலகளவில் ஏறத்தாழ 88 லட்சம் பேரின் உடல்களுக்குள் இந்த வைரஸ் புகுந்து விட்டது. 4 லட்சத்து 65 ஆயிரம் உயிர்களை பறித்தும் இருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். பெண்களை விட ஆண்கள்தான் உலகளவில் இந்த வைரசின் அதிகபட்ச தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் இந்த விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் சரி, மருந்து கண்டுபிடிப்பதிலும் சரி, ஆண், பெண் என இரு பாலாரிடத்திலும் உள்ள உயிரியல் வேறுபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இவர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராாய்ச்சி பதிவு இப்படி சொல்கிறது-

“உலகைச்சுற்றிலும், ஒவ்வொரு கண்டத்திலும், கடுமையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் ஆண்கள்தான் கணிசமாக அனுமதிக்கப்படுவதை பார்க்கிறோம். கொரோனா வைரசால்தான் அவர்கள்தான் அதிகளவில் உயிரிழப்பதற்கும் வாய்ப்பு அதிகம். சில ஆய்வுகள் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்காக இருக்கிறது என சொல்கின்றன. ஆண்களை போன்றே பெண்களும் சம அளவில் பாதிக்கப்பட்டாலும்கூட, பெண்கள்தான் குணம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது”.

பெண்களே பலமானவர்கள்...

பொதுவாக ஆண்களைப் போலவே பெண்கள் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறையிலும் வந்து விட்டபோதிலும், இன்னும் பெண்களை உடலளவில் பலவீனமானவர்களாக பார்க்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் முன் பெண்கள்தான் பலசாலிகள் என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் பொதுவாக வைரஸ்களுக்கு மிக விரைவான மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கிறார்கள். இதுவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவ் 2-க்கு எதிராக பெண்களின் பாதுகாப்புக்கு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம் என்று அந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

உகான் தரவுகள்

சீனாவின் உகான் நகரில், கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது எடுத்த தரவுகள், ஆண்களை விட பெண்கள்தான் கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக அழிக்கிறார்கள் என்று காட்டுவதாக அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

ஆண், பெண் என்னும் பாலின வேறுபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறதாம்.

நோய் எதிர்ப்பு சக்தி, பாலின வேறுபாடுகள், மரபணு மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான ஹார்மோன் வேறுபாடுகளால் ஏற்படுகின்றன என்பதை விளக்கும் பிற வைரஸ்களுக்கான தரவு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

கொரோனாவை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்கு பாதகமாக உள்ளது என்பதற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று 66 சதவீதம் ஆண்களையும், 34 சதவீதம் பெண்களையும் பாதிக்கிறது என தெரியவந்துள்ளதாக ‘ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் சயின்ஸ்’ பத்திரிகையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசிடம் இருந்து ஆண், பெண் என பேதமின்றி இரு தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், பெண்களை விட ஒரு படி ஆண்கள் அதிக எச்சரிக்கையாக இருங்கள் என்பதுதான் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்.
Tags:    

Similar News