செய்திகள்
போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரியில் கனமழை எதிரொலி : உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தம்

Published On 2020-08-05 18:09 GMT   |   Update On 2020-08-05 18:09 GMT
நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழையின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பலபகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வனச்சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (05.08.2020) மாலை 7 மணி முதல் நாளை(06.08.2020) காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

மேலும் காற்று, மழை அதிகமாக உள்ளதால் வரும் 8 ஆம் தேதி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணப்பு மீட்பு படைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆபத்தான மரங்கள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு வர அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News