செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-01-27 12:49 GMT   |   Update On 2021-01-27 12:49 GMT
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு திறக்க தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அதனை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்

இதையடுத்து, வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய கோர்ட் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, போயஸ் தோட்டத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தொடர்பாக இன்று பிற்பகலில் சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு வழங்கப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை அரசு திறக்க தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை. ஆனால் பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது.
Tags:    

Similar News