ஆன்மிகம்
திருவதிகை வீட்டானேசுவர்

சைவத்தை வாழ வைத்த திருவதிகை

Published On 2019-11-09 06:06 GMT   |   Update On 2019-11-09 06:06 GMT
சைவ மதத்திற்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் எங்கும் சமண மதமே பரவியிருந்தது. காஞ்சிபுரத்தை பல்லவ மன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்த மன்னர்கள் சமண மதத்தையை தழுவி வந்தனர்.

அந்த காலகட்டத்தில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார்-மாதினியார் தம்பதிகளுக்கு மகனாக மருள்நீக்கியர் (திருநாவுக்கரசர்) அவதரித்தார். அவருக்கு திலகவதியார் என்ற சகோதரி இருந்தார்.

திருவாமூர், திருவதிகையில் இருந்து எட்டு மைல் தொலைவில் மேற்காக உள்ளது. அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே சிவபக்தர்களாக விளங்கினார்கள்.

திருவாமூரில் உள்ள பசுபதீஸ்வரர் மீது அவர்கள் அனைவரும் பக்தி கொண்டு விளங்கினர்.திருமண வயது வந்ததும் திலகவதியாருக்கு மாப்பிள்ளைப்பார்த்து நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை, மன்னரிடம் படைத்தலைவராக இருந்தார்.

நிச்சயதார்த்தத்தின் பின் ஏற்பட்ட போருக்கு மாப்பிள்ளை சென்றார். அங்கே போரில் அவர் மரணம் அடைந்தார். இதன் பிறகு வேறு மாப்பிள்ளையை மணம் புரிந்து கொள்ள திலகவதியார் மறுத்து விட்டார். இந்த சோகத்தினால் புகழனாரும், மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர்.

இவ்வாறு தந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராக இறந்ததும், தமக்கையின் திருமணம் நின்று போனதும் மருள்நீக்கியாரின் மனதில் பெரும் துன்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு தெய்வத்தின் மீது இருந்த பக்தி குறைந்தது. சமணப்பள்ளியில் சேர்ந்து, சமணராக மாறினார் மருள்நீக்கியார்.

சமண மதத்தில் சேர்ந்த மருள்நீக்கியார் தருமசேனர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். திலகவதிக்கு தன் ஒரே தம்பி சமண மதம் தழுவியது பெரும் பெரும் கவலையாக இருந்தது.

இதனால் பெரும் துன்பம் அடைந்த திலகவதி தன் சொந்த ஊரான திருவாமூரை விட்டு அருகில் இருந்த திருவதிகை திருத்தலத்திற்கு குடிபெயர்ந்தார். திருவதிகையில் இருந்த வீராட்டானேஸ்வரரிடம் தினமும் இதுபற்றி முறையிட்டார். ஒருநாள் திலகவதியின் கனவில் தோன்றிய ஈசன் கவலைப்பட வேண்டாம். உன் தம்பி மருள்நீக்கியாருக்கு சூலை நோயை தரப்போகிறேன். அதன்பின் அவன் உன்னை வந்தடைவான் என்று கூறினார்.

அது போல தருமசேனருக்கு வயிற்றில் கடும் வலி ஏற்பட்டது. சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்தும் அந்த வலி நிற்கவில்லை. இதனால் கடும் துயரம் அடைந்த மருள்நீக்கியார் எப்படியும் தன் திலகவதியாரை காண புறப்பட்டார். அதற்கு சமணர்கள் அனுமதிக்காததால் இரவோடு இரவாக அங்கிருந்து புறப்பட்டு ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திருவதிகையை அடைந்தார்.

தம்பியைக் கண்ட திலகவதி மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மருள்நீக்கியாரோ மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். நோய் அவரை அந்த அளவிற்கு வருந்தியது. அதற்காக கவலைப்பட வேண்டாம் என்று கூறிய திலகவதியார் தம்பியை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றார்.

கோவிலின் முன் மண்டபத்தில் வைத்து (தற்போது இந்த மண்டபம் திருநீறு மண்டபம் என அழைக்கப்படுகிறது) தம்பிக்கு திருநீறு தந்தார். பின் இருவரும் உள்ளே சென்று இறைவனைத் தரிசித்தார்.

மருள்நீக்கியாரின் வயிற்றுவலி நீங்கியது. அத்துடன் அவர் பாடல்களின் இனிமையை உணர்ந்த இறைவன் இன்றிலிருந்து நீ நாவுக்கரசர் என்று அழைக்கப்படுவாய் என்று அசரீரியாக கூறினார்.

வீரட்டானேஸ்வரர்க்கு செய்யும் தொண்டே சிறந்தது என்ற மனமகிழ்ச்சியுடன் சகோதரி திலகவதியுடன் சேர்ந்து உழவாரப்பணி செய்து வந்தார் மருள்நீக்கியார். இதற்குள் அவர் மேல் கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள் காஞ்சிபுரத்திற்கு சென்று அங்கிருந்த மன்னனிடம் மருள்நீக்கியார் பற்றி பல பொய்களை சொல்லி, போட்டுக்கொடுத்து கோபத்தை உண்டாக்கினார்கள்.

பல்லவ மன்னன் திருநாவுக்கரசருக்கு பல்வேறு துன்பங்களை தண்டனை என்ற பெயரில் வழங்கினான். எதிலும் திருநாவுக்கரசர் துன்பப்படாமல் இருந்தார். அவரை இறுதியாக கடலில் தள்ளிவிடுவது என்று முடிவு செய்தனர். பல்லவர்களின் துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு அருகில் நடுக்கடலில் பாறையில் திருநாவுக்கரசரை கட்டி கடலில் தள்ளிவிட்டனர்.

கற்பாறை, மரக்கட்டையாக மாறி கடலில் மிதந்த வண்ணம் திருப்பாதிரிபுலியூரை (தற்போதைய கடலூர் நகர்) அடைந்தது. கரையேறிய திருநாவுக்கரசர் மக்கள் புடைசூழ திருவதிகை திருத்தலத்தை வந்தடைந்தார். இந்த செய்தி நாடெங்கும் பரவ பல்லவ மன்னன் மனம் மாறினான் தன் பரிவாரங்களுடன் திருவதிகையை வந்தடைந்தான்.

திருநாவுக்கரசரிடம் மன்னிப்பு கேட்டான். திருநாவுக்கரசரும் அவனை மன்னித்தார். திருவதிகை திருத்தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமையை உணர்ந்த மன்னன் சமணம் விடுத்து சைவ மதத்திற்கு மாறினார். சமணர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். பாடலிபுத்திரத்தில் இருந்த சமண மடங்கள் இடிக்கப்பட்டன. அந்த கற்களைக் கொண்டு இதே திருவதிகையில் பல்லவ மன்னன் குணபராச்வரம் என்ற கோவிலை கட்டினான்.

இவ்வாறு சைவ மதத்திற்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலாகும்.
Tags:    

Similar News