செய்திகள்
கோப்பு படம்

ஆசனூர் பகுதியில் சாலையோரம் குட்டியுடன் சுற்றித்திரிந்த யானை

Published On 2021-06-15 17:22 GMT   |   Update On 2021-06-15 17:22 GMT
ஆசனூர் அருகே காட்டுயானை தனது குட்டியுடன் சாலையோரம் சுற்றித் திரிந்தது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் -கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக -கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆசனூர் வனப்பகுதி இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வனப்பகுதியில் தீவனம் உட்கொள்வதோடு சாலையில் ஜாலியாக உலா வருகின்றன.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்கு வரத்து குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகன போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வருகின்றன. இதனால் வனவிலங்குகள் சாலையில் நீண்ட நேரம் நின்று செல்வது தொடர்கதையாகி வருகிறது. ஆசனூர் அருகே காட்டுயானை தனது குட்டியுடன் சாலையோரம் சுற்றித் திரிந்தது. அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானைகளை செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சாலையோரம் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் செல்போன் மூலம் யானைகளை படம் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News