செய்திகள்
கோப்புப்படம்

சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய கோரும் மனு : விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Published On 2020-11-18 00:02 GMT   |   Update On 2020-11-18 00:02 GMT
10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை ரத்துசெய்ய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை ரத்துசெய்ய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக சோசியல் ஜூரிஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் அசோக் அகர்வால், நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தற்போதைய கொரோனா காலத்தில், சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், தேர்வு கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? உரிய கோரிக்கையுடன் அரசையும், சி.பி.எஸ்.இ.யையும் நாடவேண்டியதுதானே? என கேள்வி எழுப்பினர்.

அப்போது வக்கீல் அசோக் அகர்வால், சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக்கோரி அளித்த மனுவை டெல்லி அரசு நிராகரித்துவிட்டது. சி.பி.எஸ்.இ. இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 10 சதவீத மாணவர்கள் அரசு பள்ளியில் பயில்கின்றனர். குறைந்தபட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமாவது தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது பழைய கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News