ஆன்மிகம்
திருவெள்ளறை பெருமாள் கோவில் முன்பு கட்டுமான பணிகளுக்காக இறக்கி வைக்கப்பட்டுள்ள செங்கற்களை படத்தில் காணலாம்.

திருவெள்ளறை பெருமாள் கோவில் திருப்பணிகள் நிறைவு பெறுவது எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-08-17 07:30 GMT   |   Update On 2021-08-17 07:30 GMT
திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மிகுந்த வேதனையில் இருக்கும் பக்தர்கள் முறையாக கோவில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு தொல்லியல் துறை அனுமதி கொடுத்து உள்ளதா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவில் ஆகும். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருமாளை தரிசனம் செய்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வருவார்கள். ேமலும் இந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் ஒருவர் கோவிலில் திருப்பணிகள் செய்ய முன்வந்து சில ஆண்டு காலமாக பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக கட்டுமானப் பணிகளுக்கு தேவையான செங்கல், சிமெண்டு உள்ளிட்ட பொருட்களை இறக்கி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. திருப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ஊரை சுற்றி உள்ள கிராம மக்கள் இக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பு சாமியை வணங்கிய பின்பு தான் கோவிலுக்குள் சென்று பெருமாளை வணங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி வடக்கு வாசல் மூடப்பட்டதன் காரணமாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு சென்றார்கள்.

இது பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கிராம பட்டையதாரர்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சில மாதங்களுக்கு முன்பு வடக்கு வாசலை திறந்து வைத்தார். இந்நிலையில், திருப்பணிகளை விரைவாக நடத்தி முடித்து விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மிகுந்த வேதனையில் இருக்கும் பக்தர்கள் முறையாக கோவில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு தொல்லியல் துறை அனுமதி கொடுத்து உள்ளதா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர். மேலும் கட்டுமான பணிகளுக்கான கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் பல மாதங்களாக அப்படியே உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோவிலையும் ஆய்வு செய்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இக்கோவில் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News