ஆன்மிகம்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா(பழைய படம்)

கொல்லங்கோடு கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

Published On 2021-03-09 09:47 GMT   |   Update On 2021-03-09 09:47 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ர காளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் தூக்க திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு தேவஸ்தான தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு தூக்கத்திருவிழா தொடக்க‌ நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் சதாசிவன் நாயர் தலைமை தாங்குகிறார். கோவில் செயலாளர் மோகன்குமார் வரவேற்று பேசுகிறார். திருவனந்தபுரம் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி ஸ்வப்பிரபானந்தா குத்துவிளக்கு ஏற்றி தொடக்க உரையாற்றுகிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் தலைமை செயலாளர் ராமச்சந்திரன் நாயர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, சென்சார் போர்டு உறுப்பினர் தர்மராஜ், கேரள சட்டமன்ற செயலாளர் உண்ணி கிருஷ்ணன் நாயர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், சோபன சங்கீத பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

விழாவில் 3-ம் நாளில் காலை 8 மணி முதல் தூக்கக்காரர்களின் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது. தொடர்ந்து தூக்க காரர்களுக்கு காப்புகட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு தூக்கக்காரர்கள் குளித்துவிட்டு ஊர்வலமாக பிரதான கோவிலுக்கு சென்று விநாயகருக்கு தேங்காய் உடைத்துவிட்டு திருவிழா கோவிலுக்கு வந்து நமஸ்காரம் செய்கின்றனர்.

8-ம் நாள் திருவிழாவில் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. திருவிழாவின் 9-ம் நாளன்று மாலை 6 மணிக்கு தூக்கத்தேர் வெள்ளோட்டம் (வண்டியோட்டம்) நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளில் அதிகாலை 4 மணிக்கு தூக்கக்காரர்கள் முட்டு குத்தி நமஸ்காரம் செய்கின்றனர்.

இதனைதொடர்ந்து அம்மன் கோவிலினுள் இருந்து எழுந்தருளி பச்சை பந்தலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து பக்தி பரவசமூட்டும் பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை தொடங்கி நடக்கிறது. தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்பணம் நடத்தி விழா முடிவடைகிறது.

கொரோனா காரணமாக கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கும், தூக்கக்காரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதாவது, கோவில் வளாகத்திற்குள் வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கோவில் வளாகத்திற்குள் கூட்டமாக நிற்க கூடாது, கோவிலில் தரிசனம் முடித்த உடன் கோவிலை விட்டு வெளியேற வேண்டும், கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை கட்டாயம், குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தும் தூக்கக்காரர்கள் பாதுகாப்பாக தங்கி இருக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நல்ல ஆரோக்கியமான உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்றும் தூக்கக்காரர்கள் யாரும் வெளி நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும், தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் தூக்கக்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தூக்க நேர்ச்சை நடத்த முடியாமல் பதிவு செய்திருந்தவர்களுக்கு தூக்க நாளில் நடையில் நிறுத்தி நேர்ச்சை நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம் குமார், துணை செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ண குமார், சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News