செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

Published On 2021-09-15 02:30 GMT   |   Update On 2021-09-15 02:30 GMT
பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் ‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன், 100 உலக தலைவர்களுடன் ஐ.நா. சபையில் பேசுகிறார்.
புதுடெல்லி :

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற அமைப்பினை உருவாக்கி உள்ளன.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 24-ந் தேதி நடக்கிறது.

இந்த உச்சி மாநாட்டின் சிறப்பம்சம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் போராடிக்கொண்டிருக்கிற இந்த தருணத்தில் முதன் முதலாக தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்கிறார்கள் என்பதுதான்.

இந்த உச்சி மாநாட்டில், உலகளாவிய சவால்கள், இந்தோ பசிபிக் விவகாரம் உள்பட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், கூறி இருப்பதாவது:-

செப்டம்பர் 24-ந் தேதி அன்று வாஷிங்டனில் நடக்கிற ‘குவாட்’ கட்டமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோருடன் கலந்து கொள்கிறார்.

கடந்த மார்ச் 12-ந் தேதி அன்று காணொலி காட்சி வழியாக நடத்திய உச்சி மாநாட்டில் இருந்து ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் ஆராய்வார்கள். கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ‘குவாட்’ தடுப்பூசி திட்டத்தை மதிப்பாய்வு செய்வார்கள்.

முக்கிய மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம், கல்வி உள்பட சமகால உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வாஷிங்டனில் இருக்கும்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதே போன்று அவர் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார். இதில் ஆப்கானிஸ்தான் விவகாரமும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘குவாட்’ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் 25-ந் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டம் (76-வது அமர்வு) நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 100 உலக தலைவர்களுடன் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த மாநாட்டின் கருப்பொருள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்வை உருவாக்குதல், நிலைத்தன்மையை மீண்டும் கட்டமைத்தல், புவியின் தேவைகளுக்கு பதில் அளித்தல், மக்களின் உரிமைகளை மதித்தல், ஐ.நா. சபைக்கு புத்துயிரூட்டுதல் ஆகும்.

பொதுச்சபை உருவாக்கியுள்ள தற்காலிக பட்டியலில் 109 நாடுகளின் தலைவர்கள் நேரிலும், 60 தலைவர்கள் காணொலி காட்சி வழியாகவும் பேசுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

193 உறுப்புநாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா.பொதுச்சபையில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்று பேசுவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

இந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது ஐ.நா. சபையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இடம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விவகாரங்களில் குரல் கொடுப்பார் என எதிர்பார்ப்பு உள்ளது.

Tags:    

Similar News