செய்திகள்
வைகோ- முத்தரசன்

பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா?- வைகோ, முத்தரசன் கண்டனம்

Published On 2019-10-05 07:45 GMT   |   Update On 2019-10-05 10:06 GMT
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த மே மாதம் 23-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல் நாள், மத்தியப் பிரதேச மாநிலம் செனாய் பகுதியில் பசுக் காவலர்கள் என்ற போர்வையில், சுபம்சிங் என்ற மதவெறியன் தலைமையில் ஒரு மதவாதக் கும்பல், மாட்டுக்கறி வைத்து இருப்பதாகக் கூறி, இஸ்லாமியப் பெண் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கினர். அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கும்படி மிரட்டி அடித்தனர். அந்தக் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பின.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றதால் ஊக்கம் பெற்ற சங் பரிவாரங்கள், சிறுபான்மை, தலித் மக்கள் மீது தொடர்ந்து கொலை வெறித் தாக்குதல்களை மேற்கொண்டன.

இந்தியா முழுவதும் நாள்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கக்கூடாது என்று எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினர்.

2019 ஜூன் 23-ந்தேதி, திரைப்பட இயக்குநர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா, சமூக ஆர்வலர் ஆசிஷ் நந்தி, ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் கஷ்யப், டாக்டர் பினாயக் சென், சோமிதோரா சட்டர்ஜி, கொங்கணா சென், சுபா முட்கல், அனுபம் ராய், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள், பல்துறை விற்பன்னர்கள் கையெழுத்து இட்டு இருந்தனர்.

‘ராம்’ என்கின்ற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அந்தப் பெயரை வன்முறைக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்; அதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.


பிரதமருக்கு இந்தக் கடிதம் தீட்டிய அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் 49 பேர் மீது புகார் கூறி, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், பீகார் மாநில காவல்துறை பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசத் துரோகம், பொதுத் தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

நாட்டில் மத சகிப்பு தன்மை தொடர வேண்டும்; சிறுபான்மை தலித் மக்கள் மீது மதவாத சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியதற்காக, தேசத்துரோக சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும். இத்தகைய போக்கை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், நாட்டின் உயர்பொறுப்பில் உள்ள பிரதமருக்கு கடிதம் எழுதி தங்களது கருத்துக்களை கூறுவதற்கு உரிமை உண்டு. அத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் தனது அலுவலக வாயிலாக பதில் அனுப்புவது கடமையாகும்.

ஆனால் இன்று பிரச்சனை தலைகீழாக உள்ளது மட்டுமல்ல, மிக அபாயகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2018 அக்டோபர் முதல் 2019 ஜனவரி 1, வரை மதரீதியாக 254 வெறுப்பு கொலைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 579 பேர் காயமடைந்துள்ளனர். ஆதாரத்தை சுட்டிக்காட்டி 49 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

“குற்றங்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், குற்றம் புரிந்தோர் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள். இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்கின்றது” என்ற பதில் பிரதமரிடமிருந்து வருவதற்கு மாறாக, கடிதம் எழுதியது குற்றம், அவர்கள் அனைவரும் தேசதுரோகிகள் என்று முத்திரை குத்தி வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்திருப்பது என்பது எந்த ஒரு ஆட்சியிலும் நடந்ததாக தெரியவில்லை.

நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது.

தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டிப்பதுடன் இதனை திரும்ப பெற கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News