செய்திகள்
சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமி பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

சங்கரன்கோவிலில் இஸ்லாமியர்களிடம் அமைச்சர் ராஜலட்சுமி வாக்கு சேகரிப்பு

Published On 2021-04-04 12:15 GMT   |   Update On 2021-04-04 12:15 GMT
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும் போது காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார். மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளிக்கிறார்கள். நேற்று முன்தினம் அமைச்சர் ராஜலட்சுமி சங்கரன்கோவில் நகரில் 25-வது வாா்டு பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகா், நேருநகா் மற்றும் 30-வது வாா்டு பகுதிக்கு உட்பட்ட திருப்பூா் குமரன் நகா், முல்லை நகா் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் அமைச்சர் ராஜலட்சுமி நேற்று சங்கரன்கோவில் நகரில் 15, 17-வது வார்டுகளில் இஸ்லாமியர்களிடம் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ராஜலட்சுமி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பயன்படும் விதம் நல்ல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், இலவச வாஷிங்மிஷின் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரிசி வெல்லம், கரும்பு மற்றும் உதவித்தொகையாக ரூ.2,500 வழங்கப்படும். இவை தொடர்ந்து கிடைப்பதற்கு இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள்.

அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும் போது காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இஸ்லாமிய கருவூலம் அமைக்கப்படும். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனித்தனி மயான வசதி அமைத்துத் தரப்படும். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தப்படும். மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு அனைத்து சலுகைகளும் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். எனவே எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், நகர பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, முன்னாள் கவுன்சிலர்கள் ராமதுரை, ஜெயலட்சுமி, வக்கீல் மாரியப்பன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாகிகள் முகமது ஜலீல், முகம்மது மீரான், சாகுல் அமீது, அப்பாஸ், மகளிர் அணி அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News