செய்திகள்
கோப்புப்படம்

விராட் போர்க்கப்பல் : தற்போதைய நிலை தொடர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-02-11 00:22 GMT   |   Update On 2021-02-11 00:22 GMT
விராட் போர்க்கப்பலை உடைக்கும் விவகாரத்தில் எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதுள்ள நிலையை தொடர நீதிபதி உத்தரவிட்டார்.
புதுடெல்லி:

இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக இயங்கிய ஐ.என்.எஸ்.விராட் விமானந்தாங்கி போர்க்கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு விடைபெற்றது. அதன்பிறகு அந்த கப்பல் மும்பை நேவல் டக்யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டது. விராட் போர்க்கப்பலை அருங்காட்சியகம் அல்லது மிதக்கும் ஓட்டலாக மாற்றும் அரசின் திட்டம் கைகூடவில்லை.

இந்தநிலையில் அந்த கப்பலை உடைக்கும் ஒப்பந்தத்தை குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் குழுமம் பெற்றது. அதற்காக மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள அலாங் பகுதிக்கு கடந்த ஆண்டு அக்கப்பல் கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையில் என்வி டெக் மரீன் கன்சல்டன்ட் என்ற நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விராட் போர்க்கப்பலை உடைப்பதற்கு தடைவிதித்து, அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், விராட் போர்க்கப்பலை உடைக்கும் விவகாரத்தில் எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதுள்ள நிலையை தொடரவும் உத்தரவிட்டது.
Tags:    

Similar News