ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் கோவில்களில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் கோவில்களில் தெப்ப உற்சவம்

Published On 2021-01-28 03:04 GMT   |   Update On 2021-01-28 03:04 GMT
சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் கோவில்களில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னம், ரிஷபம், யானை, வெள்ளி, சேஷ வாகனம் ஆகியவற்றில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், மாலை 6 மணிக்கு அபிஷேகமும், இரவு 8.15 மணிக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க இரவு 8.25 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். அப்போது தெப்பத்தை சுற்றி நான்கு புறங்களிலும், கூடிஇருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வணங்கினர்.

பத்தாம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை 7.31 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் தைப்பூசத்திற்கு கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, வழிநடை உபயங்கள் கண்டருளி பின்னர் நொச்சியம் வழியாக வடகாவேரி சென்றடைகிறார். அங்கு மாலையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் இரவு 11 மணிவரை ஸ்ரீரங்கம் ெரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நாளை வடதிரு காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார் அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி இறக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை சென்றடைகிறார். தொடர்ந்து நடை சாத்தப்படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி சன்னதியிலிருந்து மாலை 5 மணிக்கு உற்சவர் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 6.30 மணிக்கு திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்திற்கு வந்தனர்.

அங்கு தெப்பத்தில் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து தெப்ப உற்சவம் கண்டருளினர். பின்னர் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடைந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைத்தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வீதியுலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News