ஆன்மிகம்
காளிமலைக்கு ரத யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது

காளிமலைக்கு ரத யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது

Published On 2021-10-13 07:12 GMT   |   Update On 2021-10-13 07:12 GMT
கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை நேற்று காலை புறப்பட்டது. ரத யாத்திரையின் தொடக்கவிழா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் உயரமான புண்ணிய ஸ்தலமாக காளிமலை பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்காஷ்டமி திருவிழா இன்று(புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை நேற்று காலை புறப்பட்டது. ரத யாத்திரையின் தொடக்கவிழா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன் நடந்தது. விழாவுக்கு ஆனந்த சிவன் தலைமை தாங்கினார்.

காளிமலை அறக்கட்டளை செயலாளர் வித்தியாதரன், பொருளாளர் ராஜ்குமார், துணை தலைவர் ஸ்ரீகுமார், இணைச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜாராம் காவி கொடி ஏற்றி வைத்தார். இந்த ரதயாத்திரையை காளிமலை அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி சன்னதி தெருவில் தொடங்கிய ரத யாத்திரையானது பத்து காணி சிவன் கோவிலை மாலை சென்றடைந்தது. இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு பக்தர்கள் ஊர்வலமாக அம்மன் பல்லக்கில் புனித நீர் சுமந்து புறப்பட்டு சென்றனர். அங்கு அம்மனுக்கு நெய், தேன் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலாளர் காளியப்பன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News