ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை திலகமிட்டு நடராஜர் மாடவீதி உலா

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை திலகமிட்டு நடராஜர் மாடவீதி உலா

Published On 2020-12-31 03:32 GMT   |   Update On 2020-12-31 03:32 GMT
Arudra Darisanam, Nataraja, Thiruvannamalai, Arunachaleswarar Temple, ஆருத்ரா தரிசனம், நடராஜர், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில்,
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதகன முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து நேற்று காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

சாமிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் அன்று கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பைரயில் இருந்து பெறப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவர் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஏற்கனவே கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் சாமி தாிசனம் செய்ய அனுமதி தரப்படுமா; சாமி மாடவீதி உலா செல்ல அனுமதிக்கப்படுமா என்று பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கோவில் நிர்வாகம் நேற்று கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளித்திருந்தது.

கொரோனா ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் கழித்து மாட வீதியில் சாமி உலா வந்ததை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். வீடுகள் முன்பும் மக்கள் திரண்டு இருந்து நடராஜரை தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷமிட்டபடி சாமியுடனும் பக்தர்களும் வந்தால் நேற்று திருவண்ணாமலை திருவிழா கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.

மேலும் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.38 மணி வரை மார்கழி மாத பவுர்ணமி நடந்தது. பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சில பக்தர்கள் இரவில் மாற்று பாதை வழியாக சென்று விடிய, விடிய கிரிவலம் சென்றனர். நேற்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
Tags:    

Similar News