தமிழ்நாடு
போக்சோவில் கைதான பூசாரி

காதலனை தேடி வந்த மாணவியை அறையில் அடைத்து பாலியல் தொல்லை- போக்சோவில் பூசாரி கைது

Published On 2022-01-15 05:14 GMT   |   Update On 2022-01-15 05:14 GMT
வீட்டில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் கல்லுக்குழியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவர் வைத்திருந்த செல்போன் ஐ.எம்.ஐ நம்பர் மூலம் சிறுமியை தேடினர். செல்போனில் இருந்து மதுரை, நெல்லை, புதுக்கோட்டை பகுதிகளுக்கு பல மணிநேரம் பேசியது தெரியவந்தது.

மேலும் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி ராமசுந்தர் என்பவரது செல்போனுக்கும் பேசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியின் பெற்றோர் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளனர். அதில் சிறுமியும் அடிக்கடி உதவிக்காக சென்றுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே செல்போனை சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்துள்ளார். மேலும் திருப்பத்தூரைச் சேர்ந்த சரண்ராஜ் (வயது 21) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

காதலனை பார்ப்பதற்காக ஒரு பையில் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி ராமசுந்தர் சிறுமியிடம் விசாரித்தார். அதில் அவர் வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அடிக்கடி கோயிலுக்கு வந்து சென்றதால் பூசாரியிடம் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதனை பயன்படுத்தி ராமசுந்தர் தற்போது பஸ் இல்லை எனக்கூறி தனது அறையில் தங்க வைத்துள்ளார். மேலும் ஒருவாரம் சிறுமியை அறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது செல்போனை வைத்து அவர்களை கண்டுபிடித்தோம் என்றனர்.

இதனை தொடர்ந்து ராமசுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவ-மாணவிகள் தற்போது அதிக அளவில் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இதனால் செல்போன்களை அவர்கள் அதிக நேரம் கையாண்டு வருகின்றனர். வீட்டில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News