ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் குமாரி அலங்காரத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

Published On 2021-10-07 07:17 GMT   |   Update On 2021-10-07 07:17 GMT
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. முதல்நாளில் அம்மன் குமாரி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மகாளய அமாவாசையை அடுத்த நாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. நேற்று முதல் 9 நாட்களும் மண்டபத்தில் அம்மன் கொலுவில் இருப்பார்.

முதல் நாளான நேற்று அம்மன் குமாரி அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தை வலம் வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அம்மனை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து கொலு மண்டபத்தை அம்மன் சென்றடைகிறார்.

10-ம் நாளான விஜயதசமி அன்று வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் உள்பிரகாரம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் காலையில் இருந்தே கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், பாத யாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். சிலர் முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத்தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து கோவில் முன்புறம் தீபமேற்றி வழிபட்டனர்.
Tags:    

Similar News