செய்திகள்
தர்மபுரியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தர்மபுரியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்- 40 பேர் கைது

Published On 2020-12-05 09:40 GMT   |   Update On 2020-12-05 09:40 GMT
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தர்மபுரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்டு நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் தர்மபுரியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) கட்சியின் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், நிர்வாகிகள் சின்னசாமி, மாதேஸ்வரன், மாரிமுத்து, கிரைசாமேரி, உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பின்னர் அவர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் குப்புசாமி, ராமர், பூபதி, ஜோதிபாசு மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News