செய்திகள்
மந்திரி சுதாகர்

கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் கர்நாடகத்தில் மீண்டும் முழுஊரடங்கு: மந்திரி சுதாகர் எச்சரிக்கை

Published On 2021-04-12 02:13 GMT   |   Update On 2021-04-12 02:13 GMT
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்துவது தவிர்க்க முடியாது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்பட 8 நகரங்களில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் சுகாதாரத் துறை மந்திரி சுதாகர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அந்த குழுவின் தலைவர் சுதர்சன் பல்லால் மற்றும் உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பற்றியும், அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது

மேலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து அந்த நிபுணர் குழுவின் ஆலோசனைகளை மந்திரி கேட்டு பெற்றார். பெங்களூருவில் இதே வேகத்தில் கொரோனா பரவினால் நகரில் தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் அடுத்து வரும் நாட்களில் வார இறுதி நாளில் முழுஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாகியுள்ளது. சில மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாததால் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் ஊரடங்கு வேண்டாம் என்றால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு முடிவு எடுக்கும் நிலைக்கு மாநில அரசை மக்கள் தள்ளக்கூடாது.

பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால் ஊரடங்கு தேவை இல்லை. அதனால் பொதுமக்கள் மீது பொறுப்பு அதிகமாக உள்ளது. கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டால் நாம் இன்னும் பலம் அடைவோம். கொரோனா பரவலின் சங்கிலித்தொடரை உடைக்க சில நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்தில் 3 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.



அத்தகைய நிலை நமக்கு வரக்கூடாது என்றால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ள வேண்டும், தொழில்கள் தடையின்றி நடைபெற வேண்டும் என்றால் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அழுத்தமாக கூறி வருகிறோம். அனைத்து மதத்தை சேர்ந்த தகுதியானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

நுண்ணிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் கூறியபடி நுண்ணிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்படும். கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கொரோனா நோயாளி ஒருவர் ஒரு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் இறந்துவிட்டது பற்றி எனக்கு தெரியாது. இதுகுறித்து தகவல் பெற்று கருத்து கூறுகிறேன்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்துவது தவிர்க்க முடியாது. கொரோனா பரவலின் சங்கிலி தொடரை உடைக்க வேண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தான் மாநிலத்தில் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை அறிக்கையாக வழங்கும்படி நிபுணர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

முன்னதாக கொரோனா தடுப்பூசி வினியோக திருவிழா தொடக்க விழா பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, தடுப்புசி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய சுதாகர், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்களையும், இந்த சமூகத்தையும் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News