ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வழிபாடு நடத்தி புனிதநீர் சேகரித்தபோது எடுத்த படம்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கடற்கரையில் புனிதநீர் எடுத்து சென்ற பக்தர்கள்

Published On 2021-10-05 04:21 GMT   |   Update On 2021-10-05 04:22 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து கடற்கரையில் குலவையிட்டு புனித நீர் எடுத்துச் சென்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை(புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவையொட்டி கொடியேற்றம், சூரசம்ஹாரம், மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பக்தர்கள், சிறப்பு அபிஷேக உபயதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தசரா திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முந்தின நாளே பக்தர்கள் அதிகளவில் கடற்கரை, குலசேகரன்பட்டினத்தில் இடம் கிடைக்கும் பகுதிகளில் எல்லாம் தங்கி சாமி தரிசனம் செய்ய காத்து கிடப்பர். இதன் காரணமாக பக்தர்களுக்கு இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் குவிந்தனர். தசரா குழுக்கள் அமைப்பவர்கள் தங்கள் பறைகளில் வைத்து சாமி கும்பிட குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீர் எடுக்க தாரை, தப்பட்டையுடன் குவிந்தனர். அப்போது கடற்கரையிலேயே மணலால் பீடங்கள் அமைத்து கும்பம் வைத்து புனித நீரை வைத்து பெண்கள் கூடி குலவையிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவில் வந்து சாமி தரிசனத்திற்குப் பின் தங்கள் பகுதிகளுக்கு சென்றனர்.

குலசேகரன்பட்டினத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கடற்கரை, மெயின் பஜார், பஸ் நிலையம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags:    

Similar News