செய்திகள்
கோப்புபடம்

பதிவேடுகளை முறையாக சமர்ப்பிக்காத ஊராட்சி செயலர் மீது வழக்கு - கலெக்டர் புகாரின் பேரில் நடவடிக்கை

Published On 2020-10-18 09:13 GMT   |   Update On 2020-10-18 09:13 GMT
காரைக்குடி அருகே பதிவேடுகளை முறையாக சமர்ப்பிக்காததால் கலெக்டர் புகாரின் பேரில் ஊராட்சி செயலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி:

காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன். இவர் கடந்த மார்ச் மாதம் வரை ஊராட்சியில் பணியாற்றிய ஊராட்சி பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமலும், அலுவலக பதிவேடுகளை முறையாக சமர்பிக்காமல் இருந்ததால் காரைக்குடியை அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தொடர்ந்து அந்த ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இவரை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு அதன்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இருப்பினும் சங்கராபுரம் ஊராட்சி அலுவலக பதிவேடுகளை முறையாக சமர்பிக்காமல் மோசடி செய்யும் நோக்கில் இளங்கோவன் நடப்பதாக கூறி மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் அவர் மீது நடவடிக்கை எடுக்க காரைக்குடி வடக்கு போலீசாருக்கு புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News