செய்திகள்
திருச்சி விமான நிலையம்

விமானிக்கு மாரடைப்பு- விஜயபாஸ்கர் உட்பட 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Published On 2020-11-27 18:04 GMT   |   Update On 2020-11-27 18:04 GMT
திருச்சி விமான நிலையத்தில் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி:

இந்தியாவில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து, 6 வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக, தமிழக சுகாதாரத்துறையை சிறப்பிக்கும் வகையில், மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் காணொலி காட்சி மூலம் இன்று விருது வழங்க இருந்தார். இந்த விருதை பெறுவதற்காக, திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்வதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தார். காலை, 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம், கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

அதையடுத்து, உடனடியாக புதுக்கோட்டை திரும்பிய அமைச்சர் விஜயபாஸ்கர், காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரியிடம் விருதை பெற்றுக் கொண்டார். இதற்கிடையே, விமானம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. காலை, 8.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இண்டிகோ விமானம், 8.45 மணிக்கு சென்னை புறப்பட தயாராகி இருந்தது.

அப்போது விமானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இருக்கிறது. அதையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பாதுகாப்பு குழுவினர் விமானியை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒருவேளை, விமானம் புறப்பட்டு, நடுவானில் விமானிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விமானிக்கு முன்னதாகவே நேஞ்சுவலி ஏற்பட்டதால், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட, 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
Tags:    

Similar News