தொழில்நுட்பம்
ப்ளிப்கார்ட் அமேசான்

ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி - பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய ப்ளிப்கார்ட், அமேசான்

Published On 2019-10-09 06:05 GMT   |   Update On 2019-10-09 06:05 GMT
இந்திய ஆன்லைன் தளங்களில் சமீபத்தில் நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகி இருக்கின்றன.



அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களுடன் மற்ற வலைத்தளங்கள் சேர்ந்து நடத்திய ஆன்லைன் சிறப்பு விற்பனையில் ஆறே நாட்களில் சுமார் ரூ. 19,000 மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய ஆன்லைன் தளங்கள் நடத்திய சிறப்பு விற்பனையில் 90 சதவிகிதம் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்தன. செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. பெங்களூருவை சேர்ந்த ரெட்சீர் கன்சல்டன்சி எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விற்பனை விவரம் இடம்பெற்றிருக்கிறது.

இதுதவிர அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 39,000 கோடி மதிப்பிலான பொருட்கள் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஆன்லைன் விற்பனையில் ப்ளிப்கார்ட் மட்டும் 60 முதல் 62 சதவிகித பங்கு பெற்றிருக்கிறது.



இந்த விற்பனையில் அமேசான் இந்தியா பங்குகள் 22 சதவிகிதம் ஆகும். எனினும், இதன் வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகம் ஆகும். விற்பனை விவரம் பற்றி அமேசான் இந்தியா சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக நடைபெற்ற கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அமேசான் 51 சதவிகித பங்குகளை பெற்றிருந்தது.

ப்ளிப்கார்ட் நடத்திய பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அந்நிறுவனம் முந்தைய ஆண்டை விட 50 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்ததாக தெரிவித்தது. இந்த விற்பனையின் போது ஆறே நாட்களில் சுமார் 7000 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்தது.
Tags:    

Similar News