செய்திகள்
தாமிரபரணி ஆறு

நெல்லை, தூத்துக்குடியில் 4வது நாளாக மழை- தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

Published On 2021-01-12 05:44 GMT   |   Update On 2021-01-12 05:44 GMT
தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இன்று காலையும் நெல்லை, பாளை, தூத்துக்குடி மற்றும் கடலோர பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது.

மற்ற இடங்களில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 39.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆனால் காலை 6 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை வரை சூரன்குடியில் 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதன் பிறகு அங்கும் கனமழை கொட்டி வருகிறது.

பலத்த மழை காரணமாக மணிமுத்தாறு அணை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிரம்பி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்ப்ளஸ் ‌ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 117.50 அடியாக நிரம்பி உள்ளது. அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3161 கன அடி தண்ணீர் வருகிறது.

இந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. கால்வாய்களில் 455 கன அடி தண்ணீரும், தாமிரபரணி ஆற்றில் 2694 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

பாபநாசம் அணையும் நிரம்பி இன்று காலை 142.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2466 கன அடி தண்ணீர் வருகிறது. இதில் 2360 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 141.73 அடியாக உள்ளது. கடனாநதி அணை நிரம்பி நீர்மட்டம் 83 அடியாகவும், ராமநிதி அணையும் நிரம்பி நீர்மட்டம் 83 அடியாகவும் உள்ளது.

கருப்பாநதியில் 66.77 அடி நீர்மட்டம் உள்ளது. குண்டாறு அணை 36.10 அடியில் நிரம்பி வழிகிறது. தற்போது அடவிநயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் மட்டும் நிரம்ப வேண்டியது உள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் இன்று மட்டும் 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 5160 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றில் மழை வெள்ள காட்டாற்று தண்ணீரும் கலந்து வருவதால் வினாடிக்கு 6500 கன அடிக்கும் மேல் தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.

இதனால் நேற்றை விட தாமிரபரணி ஆற்றில் மேலும் 2 அடிதண்ணீர் உயர்ந்துள்ளது. குறுக்குத்துறை மண்டபம், தைப்பூச மண்டபம் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி முகத்துவரை பகுதிகளிலும் தண்ணீர் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.

தூத்துக்குடியில் கனமழை காரணமாக மழைநீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம், லூர்தம்மாள் புரம், தாமோதரன் நகர், பூல்பாண்டியாபுரம் உள்பட பல பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாளையில் மனகாவலன் பிள்ளை நகர், கே.டி.சி. நகர் புறநகர் பகுதி, மேல குலவணிகர்புரம், மீனாட்சி புரம் வேடுவர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளம் காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News