செய்திகள்
கோப்புபடம்

உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் உடுமலை பகுதி முதியவர்கள்

Published On 2021-10-27 04:22 GMT   |   Update On 2021-10-27 04:22 GMT
வருவாய்த் துறையினரால் உத்தரவு வழங்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட பயனாளிகள் மாதம்தோறும் உதவித்தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
உடுமலை:

தமிழக அரசு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

அவ்வகையில் கடந்தாண்டு உடுமலை தாலுகா சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் முதியோர் உதவித் தொகைக்காக நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய்த்துறையினரால் பரிசீலனை செய்து முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது. 

வருவாய்த்துறையினரால் உத்தரவு வழங்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட பயனாளிகள் மாதம்தோறும் உதவித்தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால்  பல மாதங்களாகியும் இதுவரை உதவித்தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. 

பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உதவித்தொகைக்கான வெறும் உத்தரவு நகலை மட்டும் வைத்து கொண்டு மருத்துவச் செலவு உட்பட அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக, பாதிக்கப்பட்ட முதியவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து உத்தரவு நகல் வழங்கப்பட்டவர்களுக்கு வரும் மாதத்தில் இருந்து உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News