செய்திகள்
மோடி, உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவுக்கு மோடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -சிவசேனா

Published On 2019-11-29 08:04 GMT   |   Update On 2019-11-29 09:07 GMT
பிரதமர் நரேந்திர மோடியும் மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவும் சகோதர உறவுகளை பகிர்ந்து கொள்கின்றனர் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் ஆட்சியமைப்பதில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. இறுதியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக நேற்று பதவியேற்றார். 

சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா நேற்று மாலை 6.40 மணிக்கு சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் உத்தவ் தாக்கரேவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டின் பிரதமர் என்ற முறையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு ஒத்துழைப்பு தரவேண்டியது மோடியின் பொறுப்பாகும் என சிவசேனா தெரிவித்துள்ளது. 
 
‘சிவசேனா - பாஜக உறவில் நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கும் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே சகோதர உறவு உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த முடிவிற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா மாநிலம் விரைவான வளர்ச்சி அடைய பிரதமர் மோடி ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். 

பிரதமர் மோடி ஒரு கட்சியை சார்ந்தவர் அல்ல. அவர் நாடு முழுவதற்கும் தலைவர். டெல்லி நம் நாட்டின் தலைநகரம். ஆனால் மகாராஷ்டிரா டெல்லியின் அடிமை அல்ல என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்த பாலாசாகேப் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே இப்போது முதல்வராகியுள்ளார்.

முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மீது 5 லட்சம் கோடி கடன் திணிக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு விரைவில் மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்கும்’ என சிவசேனா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பிரதமர் மோடி உத்தவ் தாக்கரேவை தனது இளைய சகோதரர் போன்றவர் என கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News