செய்திகள்
போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தண்ணீரை அடிக்கும் காட்சி

’ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ - அரியானா முதல்மந்திரியை எச்சரிக்கும் பஞ்சாப் முதல்மந்திரி

Published On 2020-11-26 14:57 GMT   |   Update On 2020-11-26 14:57 GMT
விவசாயிகளை தடுக்க நினைத்தீர்கள் என்றால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என அரியானா முதல்மந்திரிக்கு பஞ்சாப் முதல்மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சண்டிகர்:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கத்தோடு பஞ்சாப்பில் இருந்து இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மார்க்கமாக டெல்லி செல்ல முற்பட்டனர். 

’டெல்லியை நோக்கி செல்வோம்’ என பெயரிடப்பட்ட இந்த பேரணி பஞ்சாப்பில் தொடங்கப்பட்டு அரியானா வழியாக டெல்லியை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மார்க்கமாக நடை பயணமாகவும், வாகனங்களில் அணிவகுத்தும் டெல்லி நோக்கி புறப்பட்டனர். 

பஞ்சாப் விவசாயிகளுடன் இணைந்து ராஜஸ்தான், கேரளா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஐந்துவழி நெடுச்சாலை வழியாக டெல்லியை அடைய முற்பட்டனர். 

ஆனால், அவர்களை டெல்லி செல்லவிடாமல் எல்லையிலேயே தடுக்கும் வகையில் அரியானா மாநில போலீசார் தங்கள் மாநில எல்லையான கர்னல் பகுதியில் தடுப்புகளை அமைத்திருந்தனர். 

தடுப்புகளை தாண்டி விவசாயிகள் பேரணியாக செல்ல முற்பட்டனர். இதனால், பேரணியாக வந்த விவசாயிகளை அரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, மோதலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீரை பீரங்கிகளை போலீசார் பயன்படுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும்
பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையில், விவசாயிகள் டெல்லி செல்ல பாஜக ஆளும் அரியானா அரசு வேண்டுமென்றே அனுமதி மறுப்பதாக பஞ்சாப் முதல்மந்திரியும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான அம்ரீந்தர்சிங் தெரிவித்தார். 

இதற்கு அரியானா முதல்மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் பதிலடி கொடுத்துள்ளார். இதனால், பஞ்சாப்-அரியானா மாநில
முதல்மந்திர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அரியானா முதல்மந்திரி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகள்:-

அர்மீந்தர் சிங் நான் இதற்கு முன்பும் கூறியுள்ளேன், இப்போது கூறுகிறேன். குறைந்த பட்ச ஆதாரவிலையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நான் அரசியலை விட்டே வெளியேறிவிடுகிறேன். ஆகையில், தயவுசெய்து அப்பாவி விவசாயிகளை தூண்டிவிடும் நடவடிக்கையை நிறுத்துங்கள்.

கடந்த 3 நாட்களாக உங்களை தொடர்பு கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால் வருத்தமளிக்கும் வகையில் நீங்கள் என்னிடம் பேச விரும்பவில்லை. இப்படிதான் விவசாயிகள் விவகாரத்தில் நீங்கள் தீவிரமாக இருபதா? நீங்கள் டுவீட் மட்டுமே செய்கிறீர்கள். பேச்சுவார்த்தையில் இருந்து ஓடிவிடுகின்றனர் ஏன்?

உங்களின் பொய்கள், பரப்புரைகள் முடிவடையும் நேரம் வந்துவிட்டது. உங்கள் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துகொள்ளட்டும். இந்த கொரோனா காலத்தில் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள். மக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்துங்கள். குறைந்தபட்சம் இந்த பெருந்தொற்று காலத்தில் மலிவான அரசியல் செய்வதை தவிருங்கள்.

என பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்மந்திரி டுவிட்டரில் வெளிட்ட பதிவுகள்:-

உங்களின் பதில்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது மனோகர் லால் கட்டார். குறைந்தபட்ச ஆதார விலையை விசாயிகள் தான் ஏற்கொள்ளவேண்டுமே தவிர நான் இல்லை. 

விவசாயிகளின் ‘டெல்லி நோக்கி பயணிப்போம்’ பேரணிக்கு முன்னர் அவர்களிடம் பேசுங்கள். விவசாயிகளை நான் தூண்டிவிடுகிறேன் என நீங்கள் நினைத்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் ஏன் டெல்லியை நோக்கி பேரணியாக செல்கின்றனர்?

கொரோனா காலத்தில் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறும்போது, வைரஸ் பெருந்தொற்றை காரணமாக வைத்து, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு எந்த அக்கரையும் கொள்ளாமல் மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டங்கள் மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். பாராளுமன்றத்திற்கு சென்று தங்கள் கருத்தை வெளிப்படுத்த செல்பவர்களை நீங்கள் தடுக்கக்கூடாது. நீங்கள் ஏன் விவசாயிகளை தடுக்கிறீர்கள். 

நீங்கள் அவர்களை தடுக்க நினைத்தீர்கள் என்றால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு 

என்றார்.
Tags:    

Similar News