செய்திகள்
மன்சூர் அலிகான்

மன்சூர்அலிகானுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்- தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு

Published On 2021-04-29 10:03 GMT   |   Update On 2021-04-29 10:03 GMT
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 2லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

சென்னை:

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பார்க்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், ஊடகங்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்தார். தடுப்பூசியால் நன்றாக இருந்த நடிகர் விவேக் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மீது, சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி புகார் கொடுத்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதி, மனுதாரர் தேவையில்லாமல் பேசி சமுதாயத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் சண்முகராஜேஷ்வரன், ‘‘மனுதாரர் ஒரு நடிகர். இவர் ஊடகத்துக்கு அளிக்கும் இதுபோன்ற பேட்டியினால் சமுதாயத்தில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசியினால் பாதிப்பு எதுவும் இல்லை என்று பேட்டி கொடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதா கிருஷ்ணன், ‘‘சக நடிகர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால், அவர் ஒரு ஆவேசத்தில் இப்படி கருத்து தெரிவித்து விட்டார்’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்குகிறேன். அவர் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் ரூ.2 லட்சம் கேட்பு காசோலை எடுத்து வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News