தோஷ பரிகாரங்கள்
முத்துமாரியம்மன்

தோஷம், திருமண தடை நீக்கும் கடலூர் வண்ணாரபாளையம் முத்துமாரியம்மன்

Published On 2022-05-14 01:25 GMT   |   Update On 2022-05-14 01:25 GMT
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் வண்ணாரபாளையத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவிலில் அரசமரம், வேப்பமரத்தின் அடியில் நாகரும், விநாயகரும் உள்ளது.  நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் நாகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்குரிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

முத்து மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெறும். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு யாக நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.

இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி செல்வார்கள்.

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு அம்மனுக்கு திருமாங்கல்ய பொட்டு சாத்துவதாக வேண்டிக் கொண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான பொட்டு போன்ற பொருளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.

நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News