செய்திகள்
ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள்.

ஒரு நாளைக்கு எனக்கு ரூ.200 லாபம் கிடைக்கிறது- கமலாத்தாள் பாட்டி

Published On 2019-09-13 04:33 GMT   |   Update On 2019-09-13 04:33 GMT
தான் ஒரு நாளைக்கு 600 இட்லி விற்பனை செய்வதாகவும் அதில் 200 ரூபாய் லாபம் கிடைப்பதாகவும் தனக்கு இதுவரை நஷ்டம் ஏற்பட்டது இல்லை என்றும் கமலாத்தாள் பாட்டி தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். கமலாத்தாள் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 25 பைசாவுக்கு இட்லி வியாபாரத்தை தொடங்கினார். படிப்படியாக உயர்ந்த விலைவாசி உயர்வு காரணமாக தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ரூ.1-க்கு எந்த பொருளையும் தற்போது வாங்க முடியாத நிலையில் ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாளை நாடு முழுவதும் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேலும் அவருக்கு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்துள்ளனர்.

மகேந்திரா குரூப் தலைவர் ஆனந்த் மகேந்திரா கமலாத்தாள் பாட்டியின் தொழிலை மேம்படுத்த முதலீடு செய்ய விரும்புவதாகவும், கியாஸ் அடுப்பு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினர் கமலாத்தாள் பாட்டியை அணுகி கியாஸ் இணைப்பை வழங்கினர்.

இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதாவது:-

கடின உழைப்பாளியான கமலாத்தாள் பாட்டிக்கு நான் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். உள்ளூர் எண்ணை நிறுவன அதிகாரிகளை அணுகி கியாஸ் இணைப்பு கொடுக்க வலியுறுத்தி உள்ளேன். சமுதாயத்தில் இது போன்ற கடின உழைப்பாளிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

மேலும் கமலாத்தாள் பாட்டிக்கு மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் கிரைண்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.


கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளை நேரில் அழைத்து பாராடினார். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். ஆனால் பாட்டி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரது நல விரும்பிகள் ஏராளமானோர் பாட்டியிடம் பட்டா உள்ளது. இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இது குறித்து கமலாத்தாள் பாட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

எனக்கு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கடந்த 30 ஆண்டுகளாக விறகு அடுப்பில் இட்லி சமைத்து விற்பனை செய்து வந்தேன். தற்போது கியாஸ் இணைப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விலைவாசி உயர்ந்த இந்த காலத்தில் நீங்கள் ஒரு ரூபாய்க்கு எப்படி இட்லி விற்பனை செய்கிறீர்கள் என கேட்ட போது, எனது கடைக்கு தினசரி ஏராளமானோர் வந்து சாப்பிடுகிறார்கள். நான் ஒரு நாளைக்கு 600 இட்லி விற்பனை செய்கிறேன். எனக்கு இதில் 200 ரூபாய் லாபம் கிடைக்கிறது. எனவே எனக்கு இதுவரை நஷ்டம் ஏற்பட்டது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News