ஆன்மிகம்
அம்மன் மயான மேடையில் அலங்கரிக்கப்பட்டு இருந்ததையும், அம்மனை தரிசிக்க வந்திருந்த பக்தர்களையும் படத்தில் காணலாம்

மாசாணியம்மன் கோவில் மயான பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-02-26 06:08 GMT   |   Update On 2021-02-26 06:08 GMT
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவையொட்டி ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் கொங்கு நாட்டு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாசாணியம்மன் உப்பாற்றங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக மயான பீட நாயகியான மாசாணியம்மனுக்கு மயான பூஜை நள்ளிர வில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. ஆழியாற்றங்கரையில் பீடம் அமைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளி அருண் மற்றும் நூற்றுக்கணக்கான முறைதாரர்கள் ஆபரணப் பெட்டியில் பூஜை பொருட்கள் எடுத்து கொண்டு முன்செல்ல பக்தர்கள் படைசூழ மயான பூஜை நடைபெறும் ஆழியாற்றங்கரையில் உள்ள பீடத்துக்கு வந்தனர். அங்கு சயன கோலத்தில் மயான மண்ணில் உருவாக்கப்பட்டு இருந்த மாசாணியம்மன் உருவத்துக்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் ஆழியாற்றங்கரையில் புனித நீராடி பம்பை இசை முழுங்க, மயானத்தில் உருவாக்கப்பட்டு இருந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

நள்ளிரவு 2.30 மணிக்கு அருள் வந்து கையில் சூலாயுதத்துடன் அம்மன் அருளாளி அருண் ஆடினார். அப்போது பெண்கள் மாசாணித்தாயே, மயான பீட நாயகியே வேண்டுதல்களை நிறைவேற்ற வருவாயாக என்று பக்தி கோஷ மிட்டனர். அம்மன் அருளாளி அருண் மயானத்தில் இருந்த அம்மன் உருவாரத்தை சிதைத்து எலும்பை கவ்வியடி பிடி மண் எடுத்து, அம்மன் பட்டு சேலையில் பத்திரப் படுத்தினார். தொடர்ந்து எலும்புகளை வாயில் கவ்விய படி ஆழியாற்றங்கரையில் இருந்து உப்பாற்றங்கரைக்கு சென்றார். அப்போது அவருடன் முறைதாரர்கள், பக்தர்கள் சென்றனர். அங்கு புனித நீராடினார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மயான பூஜையில் எடுக்கப் பட்ட பிடி மண் மூலம் சக்தி கும்பஸ்தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனைமலை ஆழியாற்றங்கரை மயானத்தில் விடிய, விடிய நடந்த மயான பூஜையில் பெண் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சித்திரதேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 28-ந் தேதி காலை 8 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 1-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News