செய்திகள்
குட்டையில் மூழ்கி பலி

தொண்டாமுத்தூர் அருகே குட்டையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

Published On 2019-11-25 14:26 GMT   |   Update On 2019-11-25 14:26 GMT
தொண்டாமுத்தூர் அருகே குளிக்க சென்ற ஆட்டோ டிரைவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வடவள்ளி:

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(வயது 33). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

கார்த்திக் ராஜா அடிக்கடி தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் பகுதியில் உள்ள ஆலங்குட்டைக்கு குளிக்க செல்வது வழக்கம். அந்தகுட்டை சமீபத்தில் தான் 50 அடி ஆழத்திற்கு தூர்வாரப்பட்டது.

கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக குட்டையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியில் சென்ற கார்த்திக்ராஜா மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஆலங்குட்டை வழியாக சென்றவர்கள் குட்டை அருகே கார்த்திக் ராஜா ஆட்டோ நிற்பதை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து குட்டையில் இறங்கி தேடினர். அப்போது கார்த்திக் ராஜா குட்டையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கார்த்திக் ராஜா ஆலங்குட்டை வழியாக வீட்டிற்கு வரும் போது குளிப்பதற்காக ஆட்டோ நிறுத்தியுள்ளார். பின்னர் குட்டையில் இறங்கி குளித்தவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்து உள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News