செய்திகள்
ராகிணி திவேதி

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2020-09-17 02:04 GMT   |   Update On 2020-09-17 02:04 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு :

கன்னட திரை உலகில் விருந்து நிகழ்ச்சிகளில் நடிகைகள், நடிகர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ராகிணி திவேதி கடந்த 4-ந் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ராகிணி திவேதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், போதைப்பொருள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும் அவர் போதைப்பொருட்கள் கும்பல்களுடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணி திவேதி கடந்த 14-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக அவர், பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் இந்த வழக்கீல் ஜாமீன் கோரி பெங்களூருவில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடிகை ராகிணி திவேதி மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி நடந்த விசாரணையின் போது ராகிணி திவேதியின் ஜாமீன் மனு 16-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று நீதிபதி முன்னிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில் புதிய வக்கீல் நியமிக்கப்பட்டுள்ளதால், நடிகை ராகிணி திவேதி ஜாமீன் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். இதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ராகிணி திவேதியின் ஜாமீன் மனுவையும் வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று தனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நடிகை ராகிணி திவேதி எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால், அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். மேலும் வருகிற 19-ந் தேதி வரை நடிகை ராகிணி திவேதி சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதுபோன்று, போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பரான ராகுல் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவும் 19-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மேலும் போதைப்பொருள் விவகாரத்தில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ், வினய்குமார் ஆகிய 2 பேரும் முன்ஜாமீன் கோரி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

அந்த மனுக்கள் மீதான விசாரணையையும் வருகிற 19-ந் தேதிக்கு தள்ளிவைத்து நேற்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News