செய்திகள்
சியாச்சினில் ரோந்து பணியில் ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Published On 2019-11-30 13:03 GMT   |   Update On 2019-11-30 13:03 GMT
ஜம்மு காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்:

உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப் படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த பனி படர்ந்த மலைப்பகுதி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.
 
சியாச்சின் பகுதியில் முகாம் அமைத்து இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவின் அளவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சியாச்சின் பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கினர்.

தகவலறிந்து ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் விரைந்து சென்ற மீட்புப் படையினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News