செய்திகள்
அர்மீனிய பிரதமருடன் மோடி சந்திப்பு

எங்க நாட்டுக்கு வாங்க... மோடிக்கு அழைப்பு விடுத்த அர்மீனிய பிரதமர்

Published On 2019-09-26 06:13 GMT   |   Update On 2019-09-26 06:13 GMT
நியூயார்க்கில் நடந்த சந்திப்பின்போது இந்திய பிரதமர் மோடியை, தங்கள் நாட்டிற்கு வரும்படி அர்மீனிய பிரதமர் அழைப்பு விடுத்தார்.
நியூயார்க்:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, ஐநா பொதுசபை கூட்டத்தின் இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவ்வகையில் நேற்று அர்மீனியா மற்றும்  நியூசிலாந்து நாடுகளின் பிரதமர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

அர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யனை மோடி சந்தித்து பேசும்போது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை கணிசமாக அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மேலும், தகவல் தொழில்நுட்பம், வேளாண் பதப்படுத்துதல், மருந்துகள், சுற்றுலா மற்றும் ஆர்மீனியாவின் பிற துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கு இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் மோடி கூறினார்.



இந்தியாவிற்கும் யூரேசிய பொருளாதார ஒன்றியத்திற்கும் இடையே ஒரு விரைவான வர்த்தக ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர ஆர்மீனியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

யூரேசிய பொருளாதார ஒன்றியத்தில் அர்மீனியா  உறுப்பினராக உள்ளது. இந்த வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

இந்த சந்திப்பின்போது மோடியை அர்மீனியாவுக்கு வரும்படி அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும், அதனை மோடி ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன், பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
Tags:    

Similar News