செய்திகள்
தடுப்பூசி (கோப்புப்படம்)

கோவையில் இன்று 550 மையங்களில் 11-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-11-25 08:50 GMT   |   Update On 2021-11-25 08:50 GMT
கடந்த 2 வாரங்களாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி 11-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதன்படி கடந்த செப்டம்பர் 12-ந்தேதியில் இருந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வாரத்தில் 2 நாள்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த 2 வாரங்களாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி 11-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

ஊரகப் பகுதிகளில் 366 மையங்கள், மாநகராட்சியில் 184 மையங்கள் என மொத்தம் 550 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 1.80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த காத்திருப்பவர்களும் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 தவணை தடுப்பூசிகளையும் முழுமையாக செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழு பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் 2-வது தவணை தடுப்பூசியை தவிர்க்காமல் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News