செய்திகள்
ஜி.கே.வாசன்

டாக்டர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2021-08-31 09:59 GMT   |   Update On 2021-08-31 09:59 GMT
தமிழக அரசு, தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை தமிழ்நாட்டின் நிதிச்சுமை மற்றும் கடன் ஆகியவற்றை காரணம் காட்டி நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட வேண்டும், அகவிலைப் படியை உயர்த்த வேண்டும், வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த பல வருடங்களாக போராடி வருகிறார்கள்.

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு, தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை தமிழ்நாட்டின் நிதிச்சுமை மற்றும் கடன் ஆகியவற்றை காரணம் காட்டி நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் ஆகியோரின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News