ஆன்மிகம்
சிவபெருமான்

அகந்தை அழிவுக்கு வழி- ஆன்மிக கதை

Published On 2021-11-05 08:14 GMT   |   Update On 2021-11-05 08:14 GMT
சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அவல நிலையை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
கயிலாயம் சிவபெருமானின் இருப்பிடம். பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலான தேவர்கள், ரிஷிகள் அனைவரும் இங்கு வந்துதான் ஈசனை வழிபடுவார்கள். அவர்கள் அப்படி ஈசனை வழிபடும்போது, சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு, ‘நம்மைதான் அனைவரும் வழிபடுகிறார்கள்’ என்று நினைத்து அகந்தை கொண்டதாம்.

ஒருநாள் மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனின் மீது ஏறி, சிவபெருமானை தரிசிக்க வந்திருந்தார். கருடனைப் பார்த்த பாம்பு, “என்ன கருடா.. சவுக்கியமாக இருக்கிறாயா?” என்று அகந்தையோடு கேட்டது.

கருடனுக்கும் பாம்புக்கும் பகை என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் தற்போது பாம்பு இருக்கும் இடம், சிவபெருமானின் கழுத்து ஆயிற்றே. கருடனால் என்ன செய்ய முடியும்.. கருடன் அமைதியாக பதில் கூறியது, “அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால், எல்லோரும் சவுக்கியம்தான்.”

பாம்பின் அகந்தையை சிவபெருமான் அறிந்தார். இறைவன் இருக்கும் இடத்தில் அகந்தைக்கு இடம் கிடையாது. அப்படியிருக்க அகந்தை கொண்ட பாம்பு மட்டும் இறைவனுடன் இருக்க முடியுமா என்ன?

சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் இருந்த பாம்பை எடுத்து, வேகமாக சுழற்றி தொலைவில் வீசி எறிந்தார். விழுந்த வேகத்தில் அதன் உடலில் பெருத்த காயங்கள் உண்டானது. அதன் தலை ஆயிரம் சுக்கலாக நொறுங்கியது. ஆனாலும் இதுவரை ஈசனின் கழுத்தில் இருந்த காரணத்தால் அது இறக்கவில்லை. துன்பத்தில் உழன்று கொண்டிருந்தது.

‘நான் என்ன தவறு செய்தேன்’ என்று நினைக்கும்போதுதான், பாம்புக்கு தான் கொண்ட அகந்தை நினைவுக்கு வந்தது. அதனால் மிகவும் வருந்தியது.

ஒருநாள் அந்த வழியாக வந்த நாரத முனிவர், அந்தப் பாம்பை கவனித்து விட்டார். “என்னாயிற்று உனக்கு.. சிவனின் கழுத்தில் இருக்க வேண்டிய நீ.. எதற்காக இப்படி காயங்களுடன் தரையில் விழுந்து கிடக்கிறாய்? உனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது?” என்று கேட்டார்.

பாம்பு தனக்கு ஏற்பட்ட கதியை, நாரதரிடம் கூறி வருந்தியது. “எனது பிழையை நான் உணர்ந்துவிட்டேன். இழந்த சிறப்பை நான் மீண்டும் பெற்று, சிவபெருமானை அடைய தாங்கள்தான் எனக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும்” என்று நாதரரைப் பணிந்து பிரார்த்தித்தது.

தன்னை சரணடைந்த பாம்பின் மீது, நாரதருக்கு இரக்கம் உண்டானது. அவர் “நான் உனக்கு விநாயகர் மந்திரம் உபதேசிக்கிறேன். அதைச் சிரத்தையுடன் சொல்லிக்கொண்டே இரு. விநாயகரின் திருவருளால் உனக்கு நன்மை ஏற்படும்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

நாரதர் உபதேசித்த விநாயகர் மந்திரத்தை, அந்த பாம்பு சிரத்தையுடன் சொல்லி வந்தது. அந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்து போன விநாயகர் அங்கு தோன்றினார். விநாயகரிடம் தன்னுடைய நிலையை எடுத்துரைத்த பாம்பு, மீண்டும் தான் சிவபெருமானை அடைய அருளும்படி கேட்டுக்கொண்டது.

அதற்கு விநாயகர், “எனது அருளால் உனக்கு பழைய உடல் ஆரோக்கியம் கிடைக்கும். மீண்டும் சிவபெருமானின் கழுத்தில் நீ ஆபரணமாக இருக்கும் உயர்ந்த நிலையை அடை வாய். ஆயிரம் சுக்கல்களாக சிதறிய உன் தலை, ஆயிரம் தலைகளாக மாறி, விஷ்ணுவின் பாம்பணையாக இருக்கும் பாக்கியமும் உனக்கு கிடைக்கும். அதோடு எனது இடுப்பிலும் நாகாபரணமாக இருக்கும் பேறும் உனக்கு அருளினோம்” என்று கூறி மறைந்தார்.

சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அந்த பாம்பு போன்றே, அவல நிலையை சந்திக்க நேரிடும். பதவியில் இருக்கும் ஒருவர் நேர்மையுடன் நடந்தால், அந்த நேர்மையே அவரைக் காக்கும். பதவியும், பணமும் வரும் போது அதோடு அகந்தையும் வந்துவிடுகிறது. அந்த அகந்தை உங்களை தொடராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அழிவே மிஞ்சும்.
Tags:    

Similar News