செய்திகள்
கோப்புப்படம்

பாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை

Published On 2021-01-22 02:30 GMT   |   Update On 2021-01-22 02:30 GMT
பாகிஸ்தான் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நேற்றுமுன்தினம் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.

இந்த ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டு 2,750 கி.மீ. வரையில் பறந்து சென்று, தரையில் உள்ள இலக்கை தாக்கும். குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபாரை இலக்காக கொள்ளக்கூடியது.

பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ஏவுகணைகளில் மிக அதிக தொலைவுக்கு செல்லக்கூடியது, இந்த ஏவுகணைதான்.

இந்த ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட பாகிஸ்தான் கூட்டுப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் நதீம் ராசா கூறுகையில், “பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதியான சக வாழ்வை விரும்புகிறது. பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தடுப்பதுதான் நமது ராணுவ திறன் ஆகும்” என குறிப்பிட்டார்.

இந்த ஏவுகணை சோதனை, அதன் பல்வேறு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாக கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பு பிரிவான ஐ.எஸ்.பி.ஆர். கூறுகிறது. மேலும் இந்த சோதனை, அரபிக்கடலில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் சொல்கிறது.

இந்த சோதனை அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு வரையறைகளை வெற்றிகரமாக சரி பார்த்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஏவுகணை முதன்முதலாக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏவி சோதிக்கப்பட்டது. இன்னும் பாகிஸ்தான் படையில் சேர்க்கப்படவில்லை.
Tags:    

Similar News