ஆன்மிகம்
இயேசு

கிருபையின் அழைப்பு

Published On 2020-08-15 08:33 GMT   |   Update On 2020-08-15 08:33 GMT
ஒரு தாயின் அன்புக்கு ஒரு குழந்தை எப்படி ஓடிவந்து அம்மாவை தழுவிக்கொண்டதோ, அதைப்போல நம்முடைய தேவனும் நம்மை அன்பின் கிருபையினால் அழைக்கிறார்.
இந்த தவக்காலத்தில் தேவன் நம் மீது வைத்துள்ள கிருபையின் அழைப்பு குறித்து சற்று தியானித்து பார்ப்போம். ஒரு சமயம் சில தொழிலாளர்கள் பாறை ஒன்றை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக பாறையை குடைந்து துவாரமிட்டனர். பின்னர் வெடிமருந்தை அதன் உள்ளே வைத்து, நீள திரியின் மூலம் நெருப்பை பற்ற வைத்தனர். பாறை எப்போது வெடித்து சிதறும் என்று அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை அந்த பாறையை நோக்கி ஓடியது. இதை பார்த்ததும் அனைவரும் அந்த பாறையில் வெடி வைக்கப்பட்டுள்ளதே இந்த குழந்தை அங்கு ஓடுகிறதே என்று திகைத்து நின்றனர். ஏனென்றால் பாறையில் வைத்துள்ள வெடி எந்த வினாடி வேண்டுமானாலும் வெடித்து பாறை கற்கள் வந்து விழலாம். எனவே குழந்தையை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. ஆனால் அந்த குழந்தையின் தாயோ ஒரே வினாடியில் குழந்தையின் நிலைமையை புரிந்துகொண்டாள். உடனே அந்த தாய் தான் குழந்தையை நோக்கி ஓடினாள். பிள்ளை இன்னும் குறும்பாக அதிக தூரம் ஓடிவிடும் என்பதை உணர்ந்து, உடனே முழங்கால்படியிட்டாள். குழந்தையை நோக்கி சிரித்தவாறே இருகரம் நீட்டினாள். பாப்பா இங்கே அம்மாவிடம் ஓடிவா பார்க்கலாம் என்று அன்போடு அழைத்தார். உடனே அந்த குழந்தை தன் அம்மாவிடம் ஓடி வந்து அம்மாவை தழுவிக்கொண்டது. அடுத்த வினாடி அந்த பாறை வெடித்து சிதறியது.

என்ன ஆச்சரியம் பாருங்கள்.

ஆம், ஒரு தாயின் அன்புக்கு ஒரு குழந்தை எப்படி ஓடிவந்து அம்மாவை தழுவிக்கொண்டதோ, அதைப்போல நம்முடைய தேவனும் நம்மை அன்பின் கிருபையினால் அழைக்கிறார். அந்த கல்வாரி சிலுவையில் தொங்கியபோதும் கூட தன் இருகரம் விரித்து நம்மை பார்த்து அன்போடு, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார். இதைத்தான் வேதாகமத்தில் எபேசியர் 2-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலே, கிருபையினாலே ரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆம் தேவனுடைய பிள்ளைகளே அவரது அன்பின் கரத்திற்குள் ஓடி அடைக்கலம் பெறுவோம். இந்த தவக்காலத்தில் அவருடைய கிருபையின் அழைப்பை ஏற்று வழி நடப்போம்.

ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
Tags:    

Similar News