செய்திகள்
வெங்காயம்

வெங்காயம் விலை உயர்வு தீபாவளி வரை நீடிக்கும் - கோயம்பேடு வியாபாரி பேட்டி

Published On 2019-09-25 07:56 GMT   |   Update On 2019-09-25 07:56 GMT
வெங்காய விலை உயர்வு தீபாவளி பண்டிகை வரை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 100 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வரவில்லை. வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் வரை ரூ.20 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் ரூ.60 வரை விலை அதிகரித்தது.

இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 85 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ.55க்கும், ஆந்திரா வெங்காயம் ரூ.45க்கும் விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் ரூ.45 க்கு விற்பனை ஆகிறது.

வெங்காய விலை உயர்வு தீபாவளி பண்டிகை வரை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வெங்காயம் மொத்த விற்பனை சங்க துனை தலைவர் ஜி.எஸ். நடராஜன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா மாநிலம் கோசுகி, அதோனி, கர்ணூல், கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்தும் மகாராஷ்டிர மாநிலம் நிகோஜ், அகமது நகர், நாசிக், ஆகிய பகுதிகளில் இருந்தும் தற்போது வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

இன்று மட்டும் 85 லாரிகளில் கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கோடை காலத்தை விட பொதுவாக இந்த சீசனில் பொதுமக்கள் வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக வெங்காயத்தின் தேவை அதிகரித்துவிடும். இன்று 50 கிலோ கொண்ட வெங்காயம் மூட்டை (ஆந்திரா) வெங்காயம் ரூ.1,200 முதல் 1,600 வரைக்கும், நாசிக் வெங்காயம் ரூ. 2,200 முதல் 2,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை வரை வெங்காயம் விலை இதே நிலையில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து தீபாவளி நேரத்தில் சிகப்பு வெங்காயம் அறுவடை தொடங்கும்.

அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வெங்காயம் அதிகளவில் வர தொடங்கினால் வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பூண்டு விலையும் உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளை வேதனை அடையச் செய்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய பூண்டு தற்போது ரூ.230 க்கு விற்கிறது.

ரூ.80 க்கு விற்ற சிறிய பூண்டு ரூ.150 வரை விற்பனையாகிறது. பூண்டு விலை உயர்வு குறித்து வியாபாரி ரவிக்குமார் கூறியதாவது:-

மத்திய பிரதேச மாநிலம் மன்சூர், நீமிச்சி, பிப்பிலியா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் ராஜஸ்தான் கோட்டா, சிப்ப பரோடா ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு பூண்டு விற்பனைக்கு வருகிறது. வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பூண்டு பயிரிடுவது 2 மாதம் கால தாமதம் ஆனதால் பூண்டு விலை உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News