செய்திகள்
பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை படத்தில் காணலாம்.

மண்மங்கலம் அருகே சமத்துவபுரத்தில் அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

Published On 2020-10-12 05:44 GMT   |   Update On 2020-10-12 05:44 GMT
மண்மங்கலம் அருகே சமத்துவபுரத்தில் அடிப்படை வசதியில்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:

கரூர் மண்மங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு குடிநீர்தொட்டியில் இருந்து மட்டும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லாததால் குடிப்பதற்கும், ஆடு, மாடுகளுக்கு தேவையான தண்ணீர் எடுக்கவும் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவ்வாறு வரும் நீரும் உப்பு தன்மை அதிகம் உள்ளது. இதனால் குடிநீருக்காக அப்பகுதி பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே இப்பகுதியில் அமைக்கப்பட்டு மற்றொரு குடிநீர் தொட்டியில் குடிநீரை நிரப்பி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும், இதுகுறித்து அப்பகுதி வாலிபர்கள், பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாக்கடை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. பொது சுகாதார கழிவறைகள் இல்லாமல் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளது. மேலும் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. விளையாட்டு மைதானத்தில் உள்ள பொருட்கள் உடைந்து கிடக்கின்றன. எனவே சமத்துவபுரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News