ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர்.

அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடந்த தீர்த்தவாரி

Published On 2021-01-19 05:11 GMT   |   Update On 2021-01-19 05:11 GMT
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேேய தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரருக்கு தை மாதம் 5-ந்தேதியன்று மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி நாளில் கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை மாதம் 5-ந்தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தை மாதம் 5-ம் நாளான நேற்று காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது.

பின்னர் தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள மகிழ மரத்தின் அருகில் வைத்து சாமியின் சூலத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது.

தொடர்ந்து சூலத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் போன்றவற்றின் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

Tags:    

Similar News