செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி

Published On 2021-04-05 16:05 GMT   |   Update On 2021-04-05 16:05 GMT
குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது. அந்த தேயிலைத்தூளானது குன்னூரில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஏலம் நடக்கிறது.

அதன்படி கடந்த 1, 2-ந் தேதிகளில்(விற்பனை எண்-13) தேயிலைத்தூள் ஏலம் நடைபெற்றது. இதற்கு 14 லட்சத்து 89 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 11 லட்சத்து 31 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலைரகமாகவும், 3 லட்சத்து 58 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

ஏலத்தில் 10 லட்சத்து 31 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் ரொக்க மதிப்பு ரூ.12 கோடியே 38 லட்சம். இது 70 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.3 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.305, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.276 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.102 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.114 முதல் ரூ.116 வரையும் ஏலம் போனது.

டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.108 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.155 முதல் ரூ.220 வரையும் விற்பனையானது. ஏலத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், பச்சை தேயிலை கொள்முதல் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அடுத்த ஏலம் (விற்பனை எண்-14) வருகிற 8, 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 16 லட்சத்து 63 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
Tags:    

Similar News