ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கலாமா?

Published On 2021-02-03 04:27 GMT   |   Update On 2021-02-03 04:27 GMT
வீட்டுப் பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி கையில் ஏந்தி புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்கும் படத்தை வைத்துக் கொள்ளலாம், படுத்த வாக்கில் பறந்து கொண்டிருக்கும் படத்தை வைக்கக்கூடாது என்று சொல்வோரும் உண்டு.

இன்னும் சிலர் யுத்தத்தில் லட்சுமணன் மூர்ச்சை அடைந்ததால்தானே சஞ்சீவி மூலிகை தேவைப்பட்டது; இந்த படத்தை வைத்துக்கொண்டால் நம் வீட்டிலும் இதுபோன்ற விபரீதமான நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று தேவையில்லாத பீதியைக் கிளப்பிவிடுவர். இவை அனைத்தும் முற்றிலும் தவறான கருத்துகள்.

ஆஞ்சநேயர் இலங்கைக்குக் கொண்டு சென்ற அந்த அபூர்வ மூலிகைகள் நிறைந்த மலையினால்தான் இலங்கை செழிப்பான நாடாக விளங்குகிறது. புராண காலம் தொட்டு, சோழ, பாண்டியர்களின் வரலாற்று காலம், ஏன் தற்போதைய காலம் வரை சதா யுத்த பூமியாகவே இருந்து பேரழிவு களைச் சந்தித்து வந்த போதிலும் இயற்கை அழகு மாறாமல் பூத்துக் குலுங்குவதற்குக் காரணம் அந்த மலைதான் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.

இயற்கையாக பூமிக்கு அடியில் கிடைக்கும் ரத்தினங்கள் நிறைந்த நாடாக இலங்கை விளங்குகிறது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியே இந்த இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டது தான். இதற்குக் காரணம் ஆஞ்சநேயர் அங்குகொண்டு சென்ற அந்த மலைதான் என்று உபன்யாசகர்கள் விளக்குவார்கள். அவ்வாறு இருக்க அந்தப் படத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதில் என்ன தவறு?

இது எல்லாவற்றையும் விட இறை சக்திகளை அவரவருக்கு பிடித்த உருவத்தில் வணங்குகிறோம் என்பதே இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ஒரு சிலருக்கு உக்கிரமான மகிஷாசுரமர்த்தினியைப் பிடிக்கும், இன்னும் சிலருக்கு சாந்த ஸ்வரூபிணியாக காட்சியளிக்கும் காமாக்ஷியைப் பிடிக்கும். அது அவரவர் மனதைப் பொறுத்தது. இறைசக்திகளின் எந்த உருவத்தையும் வைத்து பூஜை செய்யலாம், ஆனால், செய்கின்ற பூஜையில் மனம் ஒன்றி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
Tags:    

Similar News