செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா நான்காவது அலை -முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை

Published On 2021-04-11 10:37 GMT   |   Update On 2021-04-11 10:37 GMT
அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி பணிகள் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 10-15 நாட்களில் மிக வேகமாக பரவியிருக்கிறது. சனிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 7897 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10,732 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசின் மூன்றாம் அலையின் பாதிப்பின்போது புதிய தொற்று உச்சத்தை அடைந்ததைவிட இப்போது மோசமாகி உள்ளது. டெல்லியில் நான்காவது அலை பரவி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது.



அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும். கொரோனா வைரசின் சுழற்சியை உடைப்பதற்கு 45 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படவேண்டும். 

தடுப்பூசி செலுத்துவதற்கான வயது வரம்புகளை நீக்குவது தொடர்பாக நான் பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக டெல்லி அரசு வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளது. டெல்லியில் 65 சதவீத நோயாளிகள் 45 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

இந்த தொற்றுநோயை சமாளிப்பதற்கு ஊரடங்கு தீர்வு ஆகாது. மாநிலத்தின் சுகாதார கட்டமைப்புகள் சீர்குலையும்போது மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். எனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News