செய்திகள்
சாமியார் இருளப்பசாமி

விடிய விடிய நீடித்த பரபரப்பு- ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி

Published On 2019-09-13 04:39 GMT   |   Update On 2019-09-13 04:39 GMT
சிவகங்கை மாவட்டம் பாசங்கரை கிராமத்தைச் சேர்ந்த சாமியார் இருளப்பசாமி ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கை அருகே உள்ள பாசாங்கரையைச் சேர்ந்தவர் இருளப்பசாமி (வயது 77). மனைவி மகனுடன் வசித்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சிவபக்தரானார். அதன் பின்னர் பல்வேறு சிவாலயங்களுக்கும் பாத யாத்திரையாக சென்று வந்தார்.

இதுவரை சுமார் 1,700 கிலோ மீட்டர் பாத யாத்திரையாகவே சிவாலயங்களுக்கு சென்றுள்ளதாக கூறி வந்த இருளப்பசாமி அந்த பகுதியில் அருள் வாக்கும் கூறி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருளப்பசாமி வருகிற செப்டம்பர் 12-ந்தேதி இரவு ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்தார். இதனை முதலில் யாரும் பெரிதாக கருதவில்லை.

இந்த நிலையில் நேற்று இருளப்பசாமி திடீரென தனக்கு சொந்தமான இடத்துக்கு வந்தார். அங்கு கட்டில் போட்டு அமர்ந்த அவர் ஜீவசமாதிக்கான தியான நிலையை தொடர்ந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் மட்டுமே குடித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பரபரப்பு ஏற் பட்டது.



இருளப்பசாமி ஜீவ சமாதி அடையப்போவதாக சுற்று வட்டார கிராமங்களுக்கும் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து ஏராளமானோர் அங்கு குவிய தொடங்கினர். நேற்று காலை முதல் இரவு வரை ஆண்களும், பெண்களும் திரண்டனர்.

இருளப்பசாமியின் மகன் கண்ணாயிரம் முன்னிலையில் ஜீவசமாதிக்கான குழி தோண்டப்பட்டது. தகவல் கிடைத்ததும் அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் அங்கு வந்தனர்.

சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனும் இரவு 11 மணிக்கு சம்பவ இடம் வந்தார். ஜீவசமாதி அடைவதாக கூறிய இருளப்பசாமியின் உடல்நலம் குறித்து டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்தனர்.



ஆனால் இருளப்பசாமியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் எப்போதும் போல் காணப்பட்டார். ஆனால் தன்னை குழிக்குள் வைக்கும் படி நள்ளிரவு 1 மணிக்கு இருளப்பசாமி கூறினார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்தனர்.

இன்று காலை 5.30 மணி வரை கலெக்டர் மற்றும் பொதுமக்கள் காத்திருந்த போதும் ஜீவசமாதிக்கான நிலையை இருளப்பசாமி எட்டவில்லை.

இதனால் கூட்டத்தை கலைந்து செல்ல கலெக்டர் ஜெயகாந்தன் அறிவுறுத்தினார். அவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஜீவசமாதிக்கு முயன்ற சாமியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கலெக்டர் கூறினார். இதனால் விடிய, விடிய காத்திருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதன்பின்னர் காலை 5.45 மணியளவில் ஜீவசமாதி முடிவை இருளப்பசாமி ஒத்தி வைத்தார். அதற்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாசாங்கரை கிராமத்தில் விடிய விடிய நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News