செய்திகள்
கோப்புபடம்

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடைகள், வீடுகளை இடிப்பதை நிறுத்த வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2020-10-18 08:47 GMT   |   Update On 2020-10-18 08:47 GMT
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடைகள் மற்றும் வீடுகளை இடிக்க முயல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன், செயலாளர் நாராயணராஜா, பொருளாளர் ராஜதுரை, நிர்வாகிகள் கதிரேசன், எம்.ஏ.கே.சலீம், அம்பலவாணன், சம்சுதீன் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

செட்டிகுளம், பார்வதிபுரம் சாலை, பாலமோர் ரோடு மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளையும், வீடுகளையும் சாலை விரிவாக்கத்துக்காக இடியுங்கள், ரூ.20 பத்திரத்தில் தாங்களே இந்த இடத்தை சாலை விரிவாக்கத்திற்கு விட்டு தருகிறோம் என்று எழுதி, நோட்டரி வக்கீலிடம் கையெழுத்தும் வாங்கி மாநகராட்சியில் கொடுத்து விட்டு கட்டிடங்களை நீங்களே இடியுங்கள் அல்லது மாநகராட்சியால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அப்பாவி வியாபாரிகளையும், பொதுமக்களின் சாலையோர வீடுகளையும் கட்டப்பஞ்சாயத்து செய்து இடிக்க முயல்வதை நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்திட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை தாங்கள் சாலை விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தவில்லை என்று வணிகர்களுக்கு பதிலளித்திருக்கிற நிலையில், மாநகராட்சி எந்த சட்டத்தின் அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் பொதுமக்களும், வணிகர்களும் நோயாலும், வியாபாரமின்மையாலும் பாதிக்கப்பட்டு, நலிவடைந்துள்ள நிலையில் மேலும் நசுக்குகிற வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் இருந்தால் அடையாளப்படுத்துங்கள், வணிகர்களாகிய நாங்களே இடித்து தருகிறோம். வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாநகராட்சியின் அடக்குமுறையிலிருந்து அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியை சுற்றி நான்கு இடங்களில் நான்கு வழிச்சாலையின் அணுகுசாலை இருக்கிறது. நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் அது பயன்பாட்டுக்கு வரும்போது நாகர்கோவில் மாநகரத்தில் போக்குவரத்து நெருக்கடியே இருக்காது. ஆகவே நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சியின் நடவடிக்கைகள் தொடருமானால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் ஒன்றிணைந்து குமரி மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவோடு கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News