செய்திகள்
கோப்பு படம்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது - 62 சதவீத மக்கள் கருத்து

Published On 2019-11-28 09:03 GMT   |   Update On 2019-11-28 09:03 GMT
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என 62 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

சர்வதேச வெளிப்படை தன்மை என்ற அமைப்பு தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் எந்த அளவுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பது பற்றி கருத்து கணிப்பு ஒன்றை மாநில அளவில் நடத்தியது. கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி நவம்பர் 15-ந்தேதி வரை இந்த கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 5 ஆயிரத்து 700 பேரிடம் கருத்துக்களை கேட்டு விவரங்களை சேகரித்தனர்.

அதில், 62 சதவீதம் பேர் அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகள், ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறினார்கள்.

அவ்வாறு பணம் கொடுத்தால்தான் வேலை நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இதே போல் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்தனர். இப்போது அது அதிகரித்து இருக்கிறது.

நிலம் சம்பந்தமான பணிகளுக்குத்தான் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக 41 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

அடுத்ததாக நகராட்சி மற்றும் மாநகராட்சி பணிகளுக்காக லஞ்சம் கொடுத்ததாக 19 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

35 சதவீதம் பேர் அடிக்கடி லஞ்சம் கொடுத்ததாக கூறினார்கள். 27 சதவீதம் பேர் ஒன்று அல்லது 2 தடவை லஞ்சம் கொடுத்ததாக கூறினார்கள்.

தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடக்காது என்று 8 சதவீதம் பேர் கூறினார்கள். அதே நேரத்தில் லஞ்சம் கொடுக்காமலும் பணிகள் நடைபெறும் என்று 30 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதி மீறல்களில்இருந்து தப்பிக்க போலீசுக்கு லஞ்சம் கொடுப்பதாக 15 சதவீதம் பேர் தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாதது, சிக்னல் விதிமுறை மீறல் போன்ற குற்றங்களை செய்யும் போது, பிடிபட்டால் போலீசார் லஞ்சம் கேட்கிறார்கள்.



அவ்வாறு பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்கு போடுவதாக கூறுகின்றனர். அல்லது அபராதம் கட்ட சொல்கிறார்கள்.

அவர்கள் கேட்கும் லஞ்ச பணத்தை விட வழக்கு மற்றும் அபராதத்துக்கு அதிக தொகை கொடுக்க வேண்டிஇருப்பதால் லஞ்ச பணத்தை கொடுத்து விட்டு தப்பி செல்வதாக கூறினார்கள்.

அதேபோல் மின்துறையிலும் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர்.

அகில இந்திய அளவில் ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்கண்ட், பஞ்சாய் ஆகிய மாநிலங்களில் அரசு அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுகிறது.

அதே நேரத்தில் டெல்லி, அரியானா, குஜராத், மேற்கு வங்காளம், கேரளா, கோவா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் லஞ்சம் வாங்குவது குறைவாக இருக்கிறது.
Tags:    

Similar News