செய்திகள்
விராட் கோலி

வில்லியம்சன் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதால் தோற்றோம் - பெங்களூரு அணி கேப்டன் கோலி புலம்பல்

Published On 2020-11-08 01:13 GMT   |   Update On 2020-11-08 01:13 GMT
வில்லியம்சனின் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதால் தோல்வி கண்டோம் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
அபுதாபி:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி போட்டியை விட்டு வெளியேற்றியது. பெங்களூரு நிர்ணயித்த 132 ரன் இலக்கை ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் எட்டியது. 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த ஐதராபாத் அணி வீரர் கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்விக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘நாங்கள் போதிய ரன்கள் எடுக்கவில்லை. சற்று பதற்றத்துடனும், தயக்கத்துடனும் ஆடியது இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம். பேட்டிங்கில் நாங்கள் மேலும் திறமையை வெளிப்படுத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அவர்களது பவுலர்களுக்கு போதிய அளவுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. ஆட்டத்தின் எல்லா தருணங்களிலும் அவர்களது பிடிக்குள் தான் இருந்தோம். கடைசி 4-5 ஆட்டங்களில் குறிப்பிட்ட பகுதி எங்களுக்கு வினோதமாகவே இருந்தது. அதாவது நாங்கள் அடித்த நல்ல ஷாட்கள் கூட பீல்டரை நோக்கி தான் சென்றது.

கேன் வில்லியம்சன் கேட்ச் வாய்ப்பை (ஐதராபாத் அணி வெற்றிக்கு 16 பந்துகளில் 28 ரன்கள் தேவையாக இருந்த போது அவர் பவுண்டரி எல்லையில் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை தேவ்தத் படிக்கல் நழுவ விட்டார்) கோட்டை விட்டதால் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த கேட்ச் வாய்ப்பை பிடித்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கும்.

பிளே-ஆப் சுற்றுடன் வெளியேறினாலும் இந்த தொடரில் எங்களுக்கு சில சாதகமான அம்சங்களும் நடந்துள்ளன. ஒன்றிரண்டு வீரர்கள் தங்களது சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்கள். இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 400 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார். இது எளிதான விஷயமல்ல. அதேபோல் முகமது சிராஜ் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். யுஸ்வேந்திர சஹால், டிவில்லியர்ஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். உள்ளூர், வெளியூர் என்ற சாதகம் இல்லாமல் ஒரே மாதிரியான சூழ்நிலை கொண்ட 3 மைதானங்களில் எல்லா அணிகளும் விளையாடுவது இந்த தொடரின் அதிக விறுவிறுப்புக்கு காரணமாகும். இந்த போட்டிக்கான எல்லா அணிகளிலும் வலுவான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் எந்தவொரு அணிக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது’ என்றார்.

பெங்களூரு அணியினரின் குரூப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் விராட்கோலி ‘என்ன தான் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் ஒரு அணியாக எங்களது பயணம் சிறப்பாகவே இருந்தது. எங்கள் வழியில் ஆட்டத்தின் முடிவுகள் அமையாவிட்டாலும் அணியின் உத்வேகமும், முயற்சியும் பெருமைக்குரியது. ஆதரவாக இருந்த எங்களது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது அன்பு எங்களை வலிமையான அணியாக உருவாக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News